Description
அறம் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் உள்ளன. அவை,
- அறம்
- சோற்றுக்கணக்கு
- மத்துறு தயிர்
- வணங்கான்
- மயில்கழுத்து
- யானைடாக்டர்
- நூறுநாற்காலிகள்
- தாயார்பாதம்
- பெருவலி
- ஓலைச்சிலுவை
- கோட்டி
- உலகம் யாவையும்
₹400.00 ₹380.00
இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை.
– ஜெயமோகன்
அறம் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் உள்ளன. அவை,
Shanmuga Priya –
புத்தகத்தின் பெயர் – அறம்
ஆசிரியர் – ஜெயமோகன்
பதிப்பகம் – வம்சி பதிப்பகம்
உண்மை மனிதர்களின் கதைகளை அறம் பேசுகிறது. 12 உண்மைக் கதைகளை ஆசிரியர் அவரின் வழியே விவரிக்கிறார். உண்மையில் ஜெயமோகன் கதையா என்கிற அயர்ச்சியோடு தான் அறத்தினை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் புத்தகத்தினை வாசிக்க ஆரம்பித்த பின் ஏதோவொரு வேலையின் காரணமாக வாசிப்பினை நிறுத்தும் போது மனம் மட்டும் நிறுத்திய வரியில் நின்று கொண்டிருந்தது. இந்த புத்தகத்தினை வாசிப்பவர்கள் கண்டிப்பாக இதை உணர்ந்தே இருப்பீர்கள். இந்த புத்தகத்தில் என்னை பாதித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அறம் அறம் பாடுதல் என்பது இலக்கியத்தில் ஒரு கவிஞன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதினால் அநீதி இழைத்தவர் அழிய பாடும் பாடல் வகை. “நந்தி கலம்பகம்“ இவ்வாறு எழுதப்பட்ட இலக்கியம் ஆகும். பாடல் பாடபட்டு முடிக்கும் தருவாயில் நந்திவர்மன் இறந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு எழுத்தாளன் தான் எழுதிய எழுத்திற்கான கூலியை கொடுக்காமல் ஏமாற்றியதற்காக வெண்பா எழுதுகிறார். அந்த வீட்டு பெண்மணி அதற்காக பதறிக் கொண்டு எழுத்தாளரின் பாக்கியை வாங்கிக் கொடுக்கிறாள் எனக் கதை செல்கிறது. படிக்காவிட்டாலும், அறம் செட்டியாரின் மனைவியிடம் இருக்கிறது.
வணங்கான் – சமூகத்தில் உள்ள சாதி படிநிலையின் உண்மை நிலையினை தோலுரித்துக் காட்டும் மிகச்சிறந்த சிறுகதை. வணங்கானின் தந்தை கறுத்தான் சிறுவயதில் தன்னுடைய சாதிய கொடுமைகளை களைந்து எவ்வாறு முன்னேறினார் என கூறும் சிறுகதை. இக்கதையில் வறுமையை “உடம்பில் வயிறு தவிர வேறு உறுப்பிருக்கிறது என்ற நினைப்பே இல்லாத வாழ்க்கை. கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக் கொண்டே இருக்கும்”, மார்ஷல் நேசமணி என்று அன்புடன் மக்களால் அழைக்கப்படும் நேசமணி அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற முதல்நாள் உயர்சாதிக்கார வக்கீல்கள் நாற்காலியிலும். நாடார் வக்கீல்கள் உட்கார முக்காலிகளும் போடப்பட்டிருந்த்தை கண்டு கோபமுற்று, நேசமணி முக்காலிகளை தூக்கி எறிவது போன்ற வரிகள் மிக அற்புதமானவை. கறுத்தான் அரசு வேலைக்கு சென்றாலும், சாதி எவ்வாறு அவரை துரத்துகிறது என்பத்தை அவருக்கு கீழ் வேலை செய்யும் மேல்சாதியை சேர்ந்தவர் எவ்வாறு அவரை நடத்துகிறார் என்பதே அதற்கு சாட்சி.
யானை டாக்டர் – மனிதராக பிறந்த எல்லோரும் ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய சிறுகதை. வனங்களில் அற்பணிப்புடன் பணியாற்றிய டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி என்னும் கால்நடை மருத்துவரின் கதை. யானை டாக்டர் கதையில் வரும் கீழ்க்கண்ட வரிகள் மிக அழகியல் வாய்ந்தவை. ”நாய்ன்னா என்னனு நினைச்ச? சச் எ டிவைன் அனிமல்… மனுசன் என்னமோ அவன் பெரிய புடுங்கி னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கிடையாது. அவனோட எச்ச புத்தியில ஒரு சொர்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வெச்சுருக்கானே. அதில் மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்சென்ஸ். என்ற வரிகள், “இங்க வந்த அதிகாரிகள் காட்டை விட்டு பிஸிகலா போனவுடனே, மெண்டலாகவும் போய்டுவாங்க, ஏன்னு யோசிச்சப்போ இந்த காட்டிலே அதிகாரம் இல்லை. அதிகாரத்தை மனுசன் ரெண்டு வழியிலே ருசிக்கலாம். ஒன்னு கீழே உள்ளவங்க கிட்ட அதை செலுத்திப்பார்க்கலாம். மேலே பார்த்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டே போகலாம். ஆனா காட்டிலே இதுக்கு வழியில்ல“…. என்ன அற்புதமான வரிகள். இது போன்று யானைகளை பற்றிய எல்லா விபரங்களையும் இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. காட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் தயவுசெய்து எந்த பொருட்களையும் அங்கே தூக்கி எறியாதீர்கள். அந்த குப்பை ஒரு வனவிலங்கின் உயிரையே குடிக்கலாம். இருப்பதிலேயே மோசமான விலங்கு மனிதன்தான் போல.
நூறு நாற்காலிகள் – நாயாடி என்னும் மனிதனால் தாழ்த்தப்பட்ட குலத்திலிருந்து வந்த தனபாலன் சிவில் சர்விஸ் தேர்வு எழுதி மாவட்ட அதிகாரி ஆனாலும் அவனை சாதி எவ்வாறு துரத்துகிறது என்பதை விளக்கும் சிறுகதை. நாயாடிகள் என்றால் குறவர்களில் ஒரு பிரிவு. அவர்களை பார்த்தாலே தீட்டு என்றபடி இருந்த்தால் அவர்கள் பகலிலே நடமாட முடியாது என்றால் அவன் எத்தகைய அவமானங்களை சந்தித்திருப்பான் என எளிதில் புரிந்து கொள்ளலாம். குப்பை தொட்டியில் பொறுக்கி தின்னும் அம்மா அவளை தன்னுடைய வாழ்க்கை முறைக்கு கொண்டுவர மாட்டோமா என்று ஏங்கும் மகன் என நீள்கிறது சிறுகதை. தனக்கு கீழ் பணிபுரியும் மேல்சாதிக்காரனை பார்த்து தனபாலின் தாய் இறக்கும் தருவாயில் “தம்றானே கஞ்சி தா தம்றானே” என அலறுகிறாள். அவளை போன்றோரின் உள்ளத்தினை மாற்ற தன் பதவியை போன்று நூறு பேரை கொண்டு வர தீர்மானிக்கிறான். இத்தனை வருடங்களாக சாதிப்படிநிலையினால் கீழ்நிலைக்கு தள்ளப்பட்ட பல சமூகங்களின் முன்னேற்றத்தினை பற்றி வழிகாட்டுகிறது.
இப்படியே பசித்த வயிற்றுக்கு பணத்தினை பார்க்காமல் சோறிடும் கெத்தேல் சாகிப், காலராவை விரட்ட ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்த வெள்ளைக்கார பாதிரியார் சாமர்வெல் என இந்த சிறுகதைகளில் வரும் அனைவரும் படிப்பவர் மனதில் என்றும் நீங்காதவர்கள். கீழ்நிலை சமுதாய மக்கள் முன்னேற அவர்களுக்கான இடமும், அவசியம் என்று ஜெயமோகன் எழுதிதே அவர் அறத்துடன் தான் இந்த சிறுகதைகளை நமக்கு அளித்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் சிறுகதைகளை நீங்களும் வாசிக்கலாமே.
ம.சண்முகப்பிரியா
போடிநாயக்கனூர்