பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்

Publisher:
Author:
(1 customer review)

110.00

பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்

110.00

PERUNTHEIVA VAZHIPAADUM PENTHEIVA VAZHIPAADUM

சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நிச்சயம் படித்து தெளிவைப்பெற உதவியாக இருக்கும் நூல் சிகரம்.ச.செந்தில்நாதன் அவர்களின் பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்.. பிற எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் சாரங்களைத் தொகுத்து இந்த புத்தகத்தின் வழியே கொடுத்திருக்கிறார். பண்டையக்கால வழக்கங்களில் மதம் என்ற ஒன்று இல்லாதிருந்த போது, சமயங்கள் மட்டுமே இருந்த நிலையில் தெய்வ வழிபாட்டில் இருந்த விழுமியங்களை மறைத்து அதிகார வர்க்கங்கள் எப்படிப் பெருந்தெய்வ வழிபாட்டை நடைமுறைப்படுத்தியிருக்கிறது என்பதையும் பெண் தெய்வக்கோயில்களின் வழிபாட்டு முறைகளையும் இப்புத்தகத்தில் காணமுடிகிறது.தாய்வழிச்சமூகம் வாழ்க்கைசூழலில் எப்படி தந்தை வழிச்சமூகமாக மாறி ஆதிக்கப்பிடிக்குள் சென்றிருக்கிறது என்பதை ‘தாய்வழி சமூகம்’பகுதியில் விளக்கியுள்ளார். எழுத்து வடிவம் தோன்றாத அநாகரிகக்காலத்திலிருந்து நடப்புக்காலம் வரை நிலவுடமைச்சமூகத்தினரும் பிராமணியமயமான சமூகத்தின் பல்வேறு வடிவங்களில் தெய்வங்களின் பெயர்களால் சமூக பொருளாதார அடக்குமுறைகளை மேற்கொண்டு ஆதாயம் பெற்றிருக்கின்றனர். உதாரணமாக,தமிழ் தெய்வங்களின் மூலமாக அறியப்பட்ட கொற்றவை  பெயர் மாற்றப்பட்டு பின்னாளில் உமையவள் ஆவதும், திணைக்கடவுளாக அறியப்பட்ட முருகன் சுப்ரமணியசாமி ஆக மாறியதும் ஆதிக்க சமூகத்தினால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே என்பதையும், சைவ சித்தாந்தத்தை மறைத்து வடமொழி ஆன்மீகம் எவ்வாறு தமிழ்நாட்டில் வந்தது என்பதையும் ‘பெருந்தெய்வ வழிபாடு’ பகுதியில் கூறுகிறார்.

அது மட்டுமில்லாமல் மரம் என்பது அக்கால மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரும் அங்கம் வகித்திருக்கிறது என்பதும் விவசாயத்தை ஆதாரமாக வைத்து நிலங்களை கோயில்களுக்கு கொடுத்து மீண்டும் அந்த கோயில்களுக்கு தர்மகர்த்தாவாக மாறி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி அதிக லாபம் அடைவதைப்பற்றி ‘சிறுதெய்வ வழிபாடு’ பகுதியில் குறிப்பிடுகிறார்.இன்றளவும் சிறு தெய்வங்களாக கிராமப்புறத்தில் வழக்கத்தில் இருக்கும் கடவுள்களான கருப்பண்ணசாமி, சுடலை மாடன், முனியாண்டி, முனீஸ்வரன், மதுரைவீரன், காத்தவராயன், நொண்டி மாடன், அய்யனார் ,ஊமத்துரை சாமி ஆகிய கடவுள்களின் தோற்றம் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். எல்லாக் காலங்களிலும் அனைத்துத் துறைகளிலும் தமக்குக்கீழே ஒரு சாதி இருந்தே ஆக வேண்டும் என்ற மறைமுகத்தீர்மானத்தோடுதான் நிலவுடைமையாளர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் பிராமணிய சிந்தனையாளர்களும் இருந்திருக்கின்றனர்..உதாரணமாக, அறுபத்தி மூன்று நாயன்மார்களில் தாழ்ந்த குடியில் பிறந்த நந்தனும் ஒரு நாயன்மார்.. ஆனாலும் அவர் கோயில் கோபுரத்தை மட்டும்தான் வழிபட முடிந்திருக்கிறது.அவ்வாறே திருநீலகண்ட யாழ்ப்பாணர் கோயிலுக்குள் செல்ல மறுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர். இவர்களைப்போல இன்றைக்கும் கிராமப்புற சமூக அமைப்பில் வண்ணான், குயவன், அம்பட்டன் முதலான ஒடுக்கப்பட்டோரும் இடம்பெறுகின்றனர்.இவர்கள் சாதியின் பெயரால் அல்ல பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதால் ஒதுக்கப்படுகிறார்கள். இந்த தகவல்களை ‘பட்டியல் சாதியினர் தாழ்த்தப்பட்டோரின் நிலை’ என்ற பகுதியில் தந்திருக்கிறார். பெண் கடவுள்கள் பெருந்தெய்வங்களாக மாற்றப்பட்டிருந்தாலும் ஆண் தெய்வங்களின் துணையுடனே அமைந்திருக்கின்றன என ‘பெண்தெய்வ வழிபாடு’ பகுதியில் சொல்கிறார்.. சாக்தம் என்ற சக்தி வழிபாடு பற்றியும் சப்த மாதர் வழிபாடு பற்றியும் இப்பகுதியில் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அம்மன் கோயில்கள் பற்றியும், கிராமப்புற அம்மன் கோயில்களின் தோற்றம்பற்றியும் ‘முக்கிய அம்மன் கோயில்கள்’ என்ற தலைப்பின் கீழ் அளித்துள்ளார். மதமும் சடங்கும் பொய் என்று சொல்லும் சித்தர்கள் முன்வைக்கும் மாற்றுத்தத்துவத்தைப்பற்றி ‘சித்தர்கள் ஒரு புதிர்’என்று குறிப்பிடுகிறார்.. காலத்திற்கு தக்க தெளிவைக்கொடுக்கும் நூலை வாசகர்கள் கைகளில் சேர்த்திருக்கும் சிகரம்.ச.செந்தில்நாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.

தீக்கதிர்

Delivery: Items will be delivered within 2-7 days